வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்
16 மார்ச், 2017

பத்து செக்கனில் எத்தனை விண்வெளிப் பொருட்களை உங்களால் பட்டியலிடமுடியும்?

நீங்கள் பின்வருவனவற்றில் எதாவதை பட்டியலிட்டீர்களா? கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், செய்மதிகள், நெபுலாக்கள், கருந்துளைகள்.

இந்த விண்வெளிப் பொருட்கள், பூமியில் இருக்கும் அத்தனையும், நாம் தொலைநோக்கிகள் மற்றும் கருவிகள் கொண்டு பிரபஞ்சத்தில் அவதானித்த அத்தனையும் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் வஸ்துவில் வெறும் 5% மட்டுமே.

இந்தப் பிரபஞ்சத்தின் மற்றைய பகுதி இரண்டு விசித்திரமான புலப்படாத வஸ்துக்களான “கரும்சக்தி” (dark energy) மற்றும் “கரும்பொருள்” (dark matter) ஆகியவற்றால் ஆகியுள்ளது.

கரும்பொருள் விண்மீன்களைப் போல ஒளிர்வதில்லை, அவை கோள்களைப் போல ஒளியை தெறிப்படையச் செய்வதில்லை, மேலும் பிரபஞ்ச துகள்கள்போல ஒளியை உறுஞ்சுவதுகூட இல்லை. எம்மால் கரும்பொருளை, அதற்கு அருகில் இருக்கும் சுழல் விண்மீன் பேரடைகள் (spiral galaxies) போல வேறு பொருளின்மீது அது செலுத்தும் ஆதிக்கத்தின் மூலமே கண்டறியக்கூடியதாக இருக்கிறது. வேகமாக காற்று வீசும் போது எம்மால் காற்றை பார்க்க முடியாது, ஆனால் காற்றால் அசையும் பொருட்களை கொண்டு காற்று வீசுகிறது என்பதை அறியலாம் அல்லவா.

கோள்களைப் போலவும், துணைக்கோள்களைப் போலவும் சுழல்விண்மீன் பேரடைகள் சுழல்கின்றன. எப்படியிருப்பினும் இப்படி சுழல அவற்றுக்கு பல நூறு மில்லியன் வருடங்கள் எடுக்கின்றது.

சூரியத் தொகுதியில் சூரியனுக்கு தொலைவில் இருக்கும் கோள்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள்களைவிட வேகம் குறைவாகவே சூரியனைச் சுற்றி வருகின்றன, இதனைப் போலவே விண்மீன் பேரடையிலும் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் பேரடையின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாக சுற்றிவரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விண்மீன் பேரடைகளுக்கு அருகில் காணப்படும் அளவுக்கதிகமான கரும்பொருளால் (நமது விண்மீன் பேரடையான பால்வீதி உட்பட), விண்மீன் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக பயணிக்கின்றன.

தற்போது விண்ணியலாளர்கள் பிரபஞ்சம் இளமையாக இருக்கும் போது இப்படியான நிலை காணப்படவில்லை என்று கண்டறிந்துள்ளனர். பழமையான விண்மீன் பேரடைகளை அவதானித்தபோது அவற்றின் எல்லையில் காணப்படும் விண்மீன்கள் மத்திக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாகவே பயணிப்பதை அவதானித்துள்ளனர்.

இதன் மூலம், ஆதிகால விண்மீன் பேரடைகள் தற்போதுள்ள விண்மீன் பேரடைகளை விட குறைந்தளவு கரும்பொருளைக் கொண்டிருக்கவேண்டும் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் இருந்த விண்மீன் பேரடைகள் பெரும்பாலும் விண்மீன்கள், வாயுக்கள் மற்றும் கோள்கள் போன்ற சாதாரண வஸ்துவால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய விண்மீன் பேரடைகள் புலப்படாத கரும்பொருளை பெருமளவு கொண்டுள்ளன.

ஆர்வக்குறிப்பு

எமது விண்மீன் பேரடையான பால்வீதி அண்ணளவாக 250 மில்லியன் வருடத்தில் ஒரு முழுச்சுழற்சியை முடிக்கிறது! 

This Space Scoop is based on a Press Release from ESO .
ESO

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்