நாம் இதுவரை பார்த்திராத வியாழன்
19 மே, 2021

சிக்கலான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரு பெரும் வாயு அரக்கன் இந்த வியாழன். இதன் வளிமண்டலத்தில் காணப்படும் முகில் கூட்டங்கள் எதிரெதிர் திசைகளில் சுழல்வதுடன், எண்ணிலடங்கா புயல்கள் எப்போதும் இதன் மேற்பரப்பை சூழ்ந்திருக்கும். இப்புயல்களிலேயே மிகப்பெரியதும் பிரபல்யமானதும் பெரும் சிவப்புப் புள்ளி என அழைக்கப்படுகிறது. பூமியே புதைந்துவிடக் கூடியளவு பெரியது இந்தப் புயல்!

வெவ்வேறுபட்ட கருவிகளைக் கொண்டு விண்மீன்களையும் கோள்களையும் ஆய்வு செய்வதில் விண்ணியலாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். வெவ்வேறு ஒளியலைகளின் வீச்சில் அவதானிக்கும் போது வெவ்வேறு பண்புகளை இவ்விண்பொருட்கள் வெளிக்காட்டுகின்றன. உதாரணமாக, எக்ஸ் கதிர் தொலைநோக்கி மூலம் அவதானிக்கும் போது தென்படும் பண்புகள் அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கி மூலம் அவதானிக்கும் போது தெரிவதில்லை. அதேபோல அகச்சிவப்பு கதிர் தொலைநோக்கி மூலம் அவதானிக்கும் போது வெளிப்படும் பண்புகள் எக்ஸ் கதிர்வீச்சில் தெரிவதில்லை. ரேடியோ தொலைநோக்கி மூலம் இந்த பிரபஞ்சத்தை அவதானித்து அறிந்துகொள்ளக்கூடியதை கட்புலனாகும் ஒளியில் இயங்கும் கருவிகளைக் கொண்டு எம்மால் அறிந்துகொள்ள முடியாது.

ஜெமினி வடக்கு தொலைநோக்கி மற்றும் NASA/ESAயின் ஹபிள் தொலைநோக்கிகளைக் கொண்டு விண்ணியலாளர்கள் குழு ஒன்று வியாழனை அகச்சிவப்பு, கட்புலனாகும் ஒளி, மற்றும் புறவூதாக்கதிர்வீச்சில் படம்பிடித்துள்ளனர்.

அகச்சிவப்புக் கதிர், கட்புலனாகும் ஒளி மற்றும் புறவூதாக் கதிர் என்பன மின்காந்த அலைவீச்சில் இருக்கும் வேறுபட்ட அலைநீளங்களை கொண்ட ஒளிகளாகும். உதாரணமாக மின்காந்த அலைவீச்சில் அகச்சிவப்புகதிர் இருக்கும் பகுதியில் வெப்பம் இருக்கிறது. மனிதக் கண்களுக்கு இக்கதிர்வீச்சு புலப்படாவிடினும், பாம்புகளால் இதனைப் பார்க்கமுடியும். வெங்குருவை (sunburn) உருவாக்கும் புறவூதாக் கத்ர்களை எம்மால் பார்க்கமுடியாது, ஆனால் தேனீக்களால் அவற்றை பார்க்கமுடியும். மின்காந்த அலைவீச்சில் இருக்கும் பல ஒளியலைகளை எம்மால் நேரடியாக பார்க்கமுடியாது. எனவே அதற்கென்று உருவாக்கிய பிரத்தியோக கருவிகளை கொண்டு அவற்றை நாம் அவதானிக்கிறோம்.

கட்புலனாகும் ஒளியில் பார்ப்பதை விட அகச்சிவப்புக் கதிர்வீச்சில் வியாழனின் ‘பெரும் சிவப்பு புள்ளிப்’ புயலை அவதானிக்கும் போது இன்னும் பெரிதாக தெரிகிறது. இதற்குக் காரணம் வேறுபட்ட அலைநீளங்களில் ஒளி வேறுபட்ட கட்டமைப்புகளை நாம் அவதானிக்க உதவுகிறது.

புயலடிக்கும் பிரதேசத்தில் இருக்கும் முகில்களை அகச்சிவப்பு கதிர்வீச்சில் எம்மால் பார்க்ககூடியவாறு இருக்கும் அதேவேளை, நீலம் மற்றும் புறவூதாக் கதிர்களை உறுஞ்சி புயலுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் நிரந்தாங்கிகளை (chromophores) எம்மால் கட்புலனாகும் ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சில் பார்க்ககூடியவாறு இருக்கிறது.

வியாழனின் தென்துருவப் பகுதியில் பிரகாசமான கீற்று போன்ற அமைப்பொன்றும் இருக்கிறது. இதுவும் ஒரு பெரும் சூராவளியாகவோ அல்லது சூறாவளிக் கூட்டமாகவோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்ணளவாக 72,000 கிமீ நீளமான இந்தச் சூறாவளிக் கட்டமைப்பு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்கிறது. இந்த நீளம் பூமிக்கும் நிலவிற்கும் இருக்கும் தூரத்தில் ஐந்தில் ஒரு பங்கு!

கட்புலனாகும் ஒளியில் அந்த நீண்ட சூறாவளி பழுப்பு நிறத்தில் தெரிகிறது, ஆனால் அகச்சிவப்பு கதிர்வீச்சில் அரிதாகவே புலப்படுவதை நீங்கள் அவதானிக்கலாம். பல்வேறு பட்ட தொலைநோக்கிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விஞ்ஞானிகள் மேலும் வியாழனைப் பற்றிய ஆய்வுகளை செய்கின்றனர். குறிப்பாக நாசாவின் ஜூனோ விண்கலம் வியாழனின் மின்னலடிக்கும் பகுதிகளில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வருவதை அவதாநித்திருந்தது. அப்பிரதேசத்தில் இருக்கும் முகில்களை ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்கின்றனர்.

படவுதவி: International Gemini Observatory/NOIRLab/NSF/AURA/NASA/ESA, M.H. Wong and I. de Pater (UC Berkeley) et al.

ஆர்வக்குறிப்பு

வியாழன் ஒரு பெரும் கோள். சூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்து கோள்களை ஒன்று சேர்த்தாலும் அதனைவிட இரண்டு மடங்கு திணிவானது! இவ்வளவு பெரிதாக இருப்பினும் ஏனைய கோள்களை விட குறுகிய நாளைக் கொண்டது வியாழன். ஒருமுறை சுழல வெறும் 10 மணித்தியாலங்களே எடுத்துக்கொள்கிறது.

This Space Scoop is based on a Press Release from NOIRLab .
NOIRLab

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்