ஒரு சிறப்பான குடும்ப புகைப்படம்
22 ஜூலை, 2020

விண்வெளிப் புகைப்படங்கள் எல்லாமே அழகானதும், அற்புதமானதாகவும் இருப்பினும், சில குறிப்பிடத்தக்க படங்கள் சிறப்பானதாக அமைந்துவிடும். இவை அரிதான சில விடயங்களை முதன்முறையாக படத்தில் கொண்டிருக்கும்.

ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் பெரும் தொலைநோக்கியை (Very Large Telescope) கொண்டு இப்படிப்பட்ட அரிதான புகைபடத்தை விஞ்ஞானிகள் குழு ஒன்று படம்பிடித்துள்ளது. இந்தப் படம் ஒரு குடும்ப புகைப்படமாகும்.

அரிதாக எடுக்கப்பட்ட படம்

இப்படத்தில் ஒரு விண்மீனையும் அதைச் சுற்றிவரும் இரண்டு கோள்களையும் பார்க்கமுடியும். சூரியனைப் போன்ற ஒரு இளம் விண்மீனையும் அதனைச் சுற்றிவரும் இரண்டு மிகப்பெரிய கோள்களையும் ஒரே படத்தில் பிடித்தது இதுவே முதன்முறையாகும்.

இன்று நமக்கு 4000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்கள் இருப்பது தெரியும். (இதனை விட மிக அதிகமாக நாம் இன்னும் கண்டறியாத பிறவிண்மீன் கோள்கள் இருக்கின்றன). ஆனாலும், இவற்றில் பெரும்பாலான கோள்கள் நேரடியாக அவதானிக்கப்படாமல் கண்டறியப்பட்டவை. உதாரணமாக குறித்த விண்மீனின் பிரகாசத்தில் ஏற்படும் வீழச்சியின் மூலம் அதனை கோள்கள் சுற்றுகின்றன என்று கண்டறியமுடியும்.

எனவேதான் இந்த புகைப்படம் அரிதானதாக கருதப்படுகிறது. அதிலும், ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிண்மீன் கோள்களை கொண்ட படம் என்னும் போது அதன் அந்தஸ்து இன்னும் அதிகரிக்கிறது. குறிப்பாக கோள்கள் விண்மீனின் ஒளியில் பெரும்பாலும் மறைந்துவிடும். எனவே இவற்றை படத்தில் பிடிப்பது என்பது மிகக் கடினமான விடையம். எனவே தான் இதற்கு முன்னர் விண்ணியலாளர்கள் நேரடியாக நமது சூரியன் போன்ற ஒரு விண்மீனை சுற்றிவரும் கோள்களை படம்பிடித்தது இல்லை.

மேலே குறிப்பிட்ட விண்மீன் தொகுதி 300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது.

நமது சூரியத்தொகுதியை தெரிந்து கொள்வோம்

வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களை ஆய்வு செய்வது, நமது சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று அறிந்துகொள்ள உதவும். இதற்கு காரணம் மேலே குறிப்பிடப்பட்ட விண்மீன் தொகுதி நமது சூரியத்தொகுதியைப் போன்றதே. ஆனால் சூரியத் தொகுதியை இளமையில் பார்த்திருந்தால் எப்படியிருந்திருக்குமோ அதனைப் போல இந்தத் தொகுதி இருக்கிறது.

இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு கோள்களும் வாயு அரக்கர்கள் வகையை சார்ந்தவை. வாயு அரக்கர்கள் எனப்படும் கோள்கள் பெரும்பாலும் வாயுக்களால் உருவானதும், பூமி, செவ்வாய் போன்ற பாறைக் கோள்களை விட மிக்கப்பெரியதும் ஆகும். இந்தப் புதிய ஆய்வு நமது தொகுதியில் இருக்கும் வியாழன், சனி போன்ற வாயு அரக்கர்களை பற்றி நாமறிந்து கொள்ள உதவும்.

படத்தில் உள்ள கோள்கள் நமது வியாழன், சனிக் கோள்களைவிட பெரியவை. மேலும், விண்மீனில் இருந்து இவை வெகு தொலைவில் அதனைச் சுற்றிவருகின்றன. இந்த இரண்டு கோள்களில் மிகப்பெரியது, நமது வியாழனைப் போல 14 மடங்கு பெரியது.

மிகப்பெரும் தொலைநோக்கி (The Very Large Telescope)

ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்திற்கு சொந்தமானா மிகப்பெரும் தொலைநோக்கி (VLT) மூலமே இந்தப் படம் பிடிக்கப்பட்டது. சில்லி நாட்டின் வடக்கு பிரதேசத்தில் இருக்கும் ஆட்டகாமா பாலைவனப் பகுதியில் இந்த தொலைநோக்கி அமைந்துள்ளது. அங்கிருக்கும் தெளிவான, ஒளிக்கசிவு அற்ற வானத்தின் காரணமாக, தெளிவாக இரவு வானை அவதானிக்க முடியும். VLT நான்கு தனிப்பட்ட தொலைநோக்கிகளைக் கொண்டுள்ளது. இவை ஒன்றுசேர்ந்து மிகப்பெரிய தொலைநோக்கியாகவும், அல்லது தனித்தனி தொலைநோக்கிகளாகவும் செயற்படும்.

படவுதவி: ESO/Bohn et al.

ஆர்வக்குறிப்பு

படத்தில் இருக்கும் விண்மீன் வெறும் 17 மில்லியன் ஆண்டுகள் வயதானது. விண்மீனின் வாழக்கையில் இது மிகவும் இளமையான பருவமாகும். இது தற்போது 4.6 பில்லியன் வருடங்கள் வயதான நமது சூரியனை இளமையில் பார்ப்பதைப் போன்ற உணர்வை தருகிறது.

This Space Scoop is based on a Press Release from ESO .
ESO

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்