சூரிய பட்டொளி மீதொரு பார்வை
14 ஜூலை, 2020

சூரிய பட்டொளி (நடுக்கம்) பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியனின் மேற்பரப்பில் திடிரென நிகழும் வெடிப்பின் மூலம் பெரும் சூரிய பிழம்புகள் உருவாகி பில்லியன் கணக்கான துணிக்கைகளை விண்வெளி நோக்கி வீசும்.

ஜப்பானில் உள்ள ஒக்கயாமா எனும் இடத்தில் இருக்கும் புதிய தொலைநோக்கி சிம்ம விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு விண்மீனில் இடம்பெற்ற பாரிய பட்டொளியை அவதானித்துள்ளது. சூரியனில் ஏற்படும் இப்படியான சூரிய நடுக்கம் பூமியில் உள்ள உயிர் மற்றும் தொழில்நுட்பத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிந்துகொள்ள உதவும்.

பூமிக்கு ஆபத்து

சூரியனில் பட்டொளி ஏற்படும் போது வெளிவரும் ஏற்றம் கொண்ட துணிக்கைகளில் சில பூமியையும் வந்தடையும். வடக்கு/தெற்கு ஒளி என அழைக்கப்படும் ஆரோராக்களை உருவாக்குவது இவைதான். ஆனால் வெறுமனே கண்களுக்கு மட்டுமே விருந்தாகாமல் இந்தத் துணிக்கைகள் மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை பழுதாக்கும். அதுமட்டுமல்லாது செய்மதிகள் மற்றும் மின்உற்பத்தி நிலையங்களைக் கூட இவை பாதிக்கும். மிக அரிதாக இடம்பெறக்கூடிய "மிகப்பெரும்" சூரிய நடுக்க நிகழ்வு மேற்கூறிய பாதிப்பை விட பல மடங்கு பாதிப்பை பூமிக்கு ஏற்படுத்தும்.

இதனால்தான் விண்ணியலாளர்கள் சூரிய பட்டொளியை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டு வேறு விண்மீன்களில் இடம்பெறும் சூரிய நடுக்கங்களை ஆய்வு செய்கின்றனர். இவற்றைப் பற்றி தெளிவான அறிவிருந்தால் சூரியனில் ஒரு பெரும் நடுக்கம் ஏற்படும் போது அது எப்படி பூமியை பாதிக்கும் என்றும் அதானால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

பன்னிரு சூரிய நடுக்கங்கள்

பெரும் சூரிய பட்டொளிகள் அரிதாகவே இடம்பெறுவதால் சூரியனை அவதானித்து போதுமான தரவுகளை திரட்டுவது என்பது கடினமான காரியம். எனவே விண்ணியலாளர்கள் பூமியைப் போன்ற அளவு மற்றும் விண்மீனைச் சுற்றிவரும் தொலைவுள்ள பிறவிண்மீன் கோள்கள் சுற்றும் விண்மீன்களை தெரிவு செய்து அவ்வாறான விண்மீன்களில் இடம்பெறும் பெரும் சூரிய பட்டொளி நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றனர்.

ஜப்பானில் உள்ள சேமேய் விண்ணியல் ஆய்வு மையத்தில் இதுவரை பன்னிரெண்டு சூப்பர் சூரிய பட்டொளிகளை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். இவை அனைத்தும் 16 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் சிவப்புக் குள்ளன் வகை விண்மீனில் அவதானிக்கப்பட்டவையாகும். இந்த சிவப்புக் குள்ளனில் இடம்பெற்ற வெடிப்புகள் அனைத்தும் அதன் மேட்பரப்பில் நிகழ்ந்துள்ளதால், சூரிய பட்டொளி பற்றிய ஆய்வுக்கு இது மிகவும் உகந்தது.

மேலும் அவதானிப்புகள் தேவை

இந்த பன்னிரண்டு சூரிய பட்டொளிகளை ஆய்வு செய்த விண்ணியலாளர்கள் இந்நிகழ்வின் மூலம் உருவாகும் ஏற்றம் கொண்ட அணுக்களின் பண்புகளையும் அவற்றின் சக்தி/ ஆற்றல் பற்றியும் பல புதிய விடயங்களை கண்டறிந்துள்ளனர். மேலும் தொடர்ச்சியாக இப்படியான நிகழ்வுகளை அவதானிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சூரியனில் ஏற்படக்கூடிய சூரிய நடுக்கங்களை முன்கூட்டியே துல்லியமாக எதிர்வு கூறமுடியும், இது பூமிக்கு வரக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க உதவும்.

படவுதவி : NAOJ

ஆர்வக்குறிப்பு

சூரியனில் இடம்பெறும் சராசரியான சூரிய பட்டொளி என்பது பூமியைப் போல பலமடங்கு பெரியது. மேலே குறிப்பிடப்பட்ட சிவப்பு குள்ளன் விண்மீனில் இடம்பெற்ற சூரிய பட்டொளி நிகழ்வுகள் சூரியனி ஏற்படும் பட்டொளியை விட 20 மடங்கு பெரியது.

This Space Scoop is based on a Press Release from NAOJ .
NAOJ

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்