ஒரு பிரபஞ்ச நடனம்
6 மே, 2020

நமக்கு அருகில் இருக்கும் ஒரு விண்மீன் தொகுதியில் மூன்று பேர் சேர்ந்து ஒரு நடனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதில் இரண்டு விண்மீன்கள் ஒன்று கருந்துளை. நாமறிந்த பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை இதுதான்!

இந்த விசித்திர நடனத்தில் ஒரு விண்மீனும் கருந்துளையும் ஒருவருக்கொருவர் 40 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவருகின்றனர். அடுத்த மூன்றாவது விண்மீன் இந்த கருந்துளை-விண்மீன் தொகுதியை சற்றே தொலைவில் இருந்து சுற்றிவருகிறது.

இதில் மிக ஆச்சரியமான விடையம் என்னவென்றால் இந்த தொகுதி எமக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதுதான். பூமிக்கு மிக அருகில் நாம் கணடறிந்துள்ள கருந்துளை இதுதான். சிலி நாட்டிலுள்ள ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் தொலைநோக்கியை கொண்டு ஆய்வு செய்துவரும் விண்ணியலாளர்கள் இந்த தொகுதி வெறும் 1000 ஒளியாண்டுகள் தொலைவில் தான் இருக்கிறது என்று கணக்கிட்டுள்ளனர்.

பூமியின் தெற்கு அரைக்கோளத்தின் இரவு வானில் இந்தக் கருந்துளை இருக்கும் விண்மீன் தொகுதியை வெறும் கண்களாலேயே பார்க்கமுடியும் என்பது இந்தக் கருந்துளை எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதற்கு ஒரு அளவீடு.

விண்ணியலாளர்கள் பல நூறு மில்லியன் கணக்கான கருந்துளைகள் நமது பால்வீதியில் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். ஆனால் நாம் வெகு சிலவற்றையே கண்டறிந்துள்ளோம். எனவே எதிர்காலத்தில் இன்னும் புதிதாக பல கருந்துளைகளை சூரியத் தொகுதிக்கு அருகில் நாம் கண்டறியலாம்!

ஆர்வக்குறிப்பு

நமது பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் கருந்துளை என்றாலும் நாம் இதனைக் கண்டு அஞ்சத்தேவையில்லை. இது அண்ணளவாக 1000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. அதாவது சீனப் பெருஞ்சுவற்றின் நீளத்தை போல ஒரு ட்ரில்லியன் மடங்கு அதிக தூரம்!

This Space Scoop is based on a Press Release from ESO .
ESO

M Srisaravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்