தூரத்து விருந்தாளி
31 அக்டோபர், 2019

நமது சூரியத்தொகுதி தற்போது ஒரு தூரத்து விருந்தாளியை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

2I/Borisov எனப் பெயரிடப்பட்டுள்ள தூமகேது நமது சூரியத்தொகுதியை சேர்ந்தது அல்ல. உண்மையில் இது எங்கிருந்து வந்தது என்று எமக்கு சரிவரத் தெரியாது. விஞானிகள் அவதானித்த, பால்வீதியில் உள்ள வேறு ஒரு சூரியத்தொகுதியில் இருந்து நமது சூரியத்தொகுதிக்கு வந்த இரண்டாவது விண்பொருள் இது. 

தூமகேதுக்கள் பொதுவாக பாறைகள், தூசுகள் மற்றும் பனியால் உருவானவை. அவற்றை சிலவேளைகளில் "அழுக்குப் பனிப்பந்து" எனவும் அழைக்கிறோம். இவை சூரியனுக்கு அருகில் வரும்போது வெப்பத்தால் இவற்றின் பனியில் ஒருபகுதி ஆவியாகிவிடும். இந்த ஆவியாகிய பனியே நாம் இரவு வானில் பார்க்கக்கூடியதாக இருக்கும்  தூமகேதுக்களின் அழகிய அம்சமான "வால்" போன்ற அமைப்பை உருவாக்கக் காரணம்.

இந்தப் படம் ஹபிள் தொலைநோக்கியால் 12 ஆக்டொபர் 2019 இல் எடுக்கப்பட்டது.
இந்த தூமகேது சூரியனை நோக்கி பயணிக்கிறது. இது சூரியனுக்கு மிக அருகில் இந்த டிசம்பர் மாதத்தில் வந்து சேரும். அடுத்த வருடத்தில் இது நமது சூரியத்தொகுதியை விட்டு வெளியேறும். சந்தர்ப்பம் வாய்த்தால் எதிர்காலத்தில் வேறு ஒரு சூரியத்தொகுதிக்குள் இது மீண்டும் பயணிக்கலாம்.

2I/Borisov தூமகேது மணிக்கு 150,000 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. இது நமது அதிவேகக் கார்களை விட 500 மடங்கு அதிகமான வேகமாகும்!

இந்த விண்வெளித் தகவல் துணுக்கு ESA/Hubble செய்தியை அடிப்படையாக கொண்டது.

படவுதவி: NASA, ESA, D. Jewitt (UCLA)

ஆர்வக்குறிப்பு

சராசரியாக ஆண்டுக்கு ஒரு தூமகேதுவே இரவுவானில் வெறும்கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தூமகேது ஒன்றை பார்த்திருக்கலாம். எனவே இந்தப்படம் உங்களுக்கு பரிட்சியமானதாக இருக்கும்.

This Space Scoop is based on a Press Release from ESA .
ESA

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்