பூமியின் அழகிய சிறுகோள் நண்பன்
28 ஜூன், 2016

விண்வெளி என்பது, இருளான வெற்றிடமாகும், ஆனால் அது எப்போதுமே தனியான வெற்றிடமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வாயு அரக்கர்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் தங்களுடன்  டஜன் கணக்கான துணைக்கோள்களை சேர்த்துக்கொண்டு பயணிக்கின்றன.

பூமிக்கும் அதேபோல நிலவு துணைக்கோளாக இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் கடந்த 100 வருடங்களாக பூமியைச் சுற்றி இன்னுமொரு நம்பிக்கையான சிறுகோள் நண்பனும் கூடவே வருகிறார்!

இந்த சிறுகோள், "சிறுகோள் 2016 HO3" எனப் பெயரிடப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் கண்டறியப்பட்டது. சூரியனைச் சுற்றிவரும் அதேவேளை, பூமியையும் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது இந்தச் சிறுகோள். 

சூரியத் தொகுதியில் இது பயணிக்கும் பாதையை கீழே உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கலாம்.

இந்தச் சிறுகோள், பூமியை விட்டு தொலைவில் சுற்றிவருவதால் இதனை நாம் நிலைவைப் போல ஒரு துணைக்கோளாக கருதமுடியாது. ஆகவே இதனை நாம் "குவாசி-துணைக்கோள்" அல்லது "அரைத் துணைக்கோள்" என அழைக்கிறோம்.

தொலைவில் பூமியை இது சுற்றிவந்தாலும், சூரியத் தொகுதியில் சூரியனைச் சுற்றிவரும் போது, இது பூமியை விட்டு அவ்வளவு தொலைவு சென்றுவிடாமல், மீண்டும் மீண்டும் பூமியையே சுற்றி வருகிறது. இன்னும் வரவிருக்கும் நூற்றுக்கணக்காக ஆண்டுகளுக்கும் இந்த நிலை தொடரும்.
இந்தச் சிறுகோள், பூமிக்கும் நிலவுக்கும் இருக்கும் தூரத்தைப் போல 100 மடங்கு தூரத்திற்கும் அதிகமான தூரத்திற்கு பூமியைவிட்டுச் சென்றதில்லை. இது பூமிக்கு மிக அருகில் வரும் தூரம், பூமிக்கும் நிலவிற்கும் இருக்கும் தூரத்தைப் போல 38 மடங்காகும். (14 மில்லியன் கிமீ) ஆகவே இந்தச் சிறிய நண்பனால் எமக்கு எந்த வித ஆபத்தும் இல்லை!

சிறுகோள் தேடல்ச் சவால்

Las Cumbres அவதானிப்பகத்துடன் சேர்ந்து சிறுகோள்களை கண்காணிப்பதற்கான இணையத்தளம் ஒன்றினை நாம் உருவாக்கியுள்ளோம்.  30 ஜூலை 2016 இல் வரும் சிறுகோள் தினத்தைக் கொண்டாடுவதற்காக இந்தத் தளம் உருவாக்கப்பட்டது. அதனைப் பார்வையிட கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://asteroidday.lcogt.net

ஆர்வக்குறிப்பு

இந்தச் சிறுகோளின் அளவு என்ன என்பது எமக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் கால்பந்து மைதானத்தின் அளவைவிடப் பெரிதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்