பேராசை கொண்ட விண்மீன்பேரடைகள்
29 ஜூன், 2015

விண்மீன்பேரடைகள் பல பில்லியன் விண்மீன்களின் தொகுதியாகும். இவை பல அளவுகளில் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? சில விண்மீன்பேரடைகள், அருகில் இருக்கும் சிறிய விண்மீன்பேரடைகளை விழுங்கித் தானே பெரிதாக வளர்ந்துவிடும்!

இப்படியாக சிறிய விண்மீன்பேரடைகளை தன்னோடு இணைத்துக்கொள்ளும் பாரிய விண்மீன்பேரடைகளைப் பற்றி வானியலாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், இதுவரை அவற்றை நிருபிப்பது என்பது மிகக்கடினமாக இருந்தது. பெரிய விண்மீன்பேரடை, சிறிய விண்மீன்பேரடையை தன்னுள் இணைத்துக்கொண்ட பின்பு, சிறிய விண்மீன்பேரடையை அடையாளம் காண்பதென்பது முடியாத காரியம். இது ஒரு நீர்த் தடாகத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்தத் தடாகத்தில் இருக்கும் நீரில், இந்த வாளித் தண்ணீரைத் தேடுவதுபோலாகும்.

அதேபோல, சிறிய விண்மீன்பேரடையில் இருந்து பாரிய விண்மீன்பேரடைக்குச் சென்றுவிட்ட விண்மீன்களை இனங்காண்பதும் முடியாத காரியம்! அதாவது எந்த விண்மீன் எந்த விண்மீன்பேரடையில் இருந்ததென்பதை இனங்கான முடியாது.

ஆனால் தற்போது வானியலாளர்கள், இப்படி மற்றைய விண்மீன்பேரடைகளை விழுங்கிக்கொண்டிருக்கும் பாரிய விண்மீன்பேரடையைக் கண்டறிய ஒரு புதிய யுக்தியைக் கண்டறிந்துள்ளனர். விண்மீன்கோள் மண்டலங்கள் (Planetary Nebula) எனப்படும் விண்மீனின் வெடிப்பின் பின்னர் எஞ்சி இருக்கும் வாயுக்களும், தூசுகளும், விண்மீன்களை விட குறைவான அளவிலேயே விண்மீன்பேரடைகளில் காணப்படுகின்றன. அத்தோடு இவற்றை கண்டுபிடிப்பதும், விண்மீன்களைக் கண்டறிவதைவிட சற்று இலகுவானது.

மீண்டும் நீர்த்தடாகத்தில் ஒரு வாளி நீரை ஊற்றும் உதாரணத்தைப் பார்க்கலாம். அனால் இந்தமுறை, நாம் சேற்றுநீரை வாளியில் இருந்து, நீர்த்தடாகத்தினுள் ஊற்றினால், சேற்றில் இருக்கும் தூசு துரும்புகள் அந்த நீர்த்தடாகத்தில் இருக்கும் நீரில் ஒருவாறு மிதந்து செல்லும் அல்லவா? அவற்றை எம்மால் பார்க்க முடியுமல்லவா?

இந்த விண்மீன்கோள் மண்டலங்களும், நீர்த் தடாகத்தினுள் ஊற்றிய சேற்று நீரைப் போலவே செயற்படுகிறது. விண்மீன்கோள் மண்டலங்களில் இருக்கும் வாயுக்கள் மற்றும் தூசுகள், சிறிய விண்மீன்பேரடை, பெரிய விண்மீன்பேரடையிநூடாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளில், சேற்று நீரில் இருந்த தூசுகள் எப்படி நீரின் மேற்பரப்பில் அசைந்தாடியதோ, அதேபோல இந்த விண்மீன்கோள் மண்டல வாயுக்களும் அசைந்தாடுகின்றன.

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி வானியலாளர்கள் மேசியர் 87 எனப்படும் மிகப்பாரிய விண்மீன்பேரடையை அவதானித்துள்ளனர். இந்த மேசியர் 87 என்ற விண்மீன்பேரடையில் இருக்கும் 300 விண்மீன்கோள் மண்டலங்களை ஆய்வு செய்த வானியலாளர்கள், இதுவரை அங்கு மறைந்திருந்த ரகசியத்தைக் கண்டறிந்துள்ளனர் – அதாவது கடந்த ஒரு பில்லியன் வருடத்தினுள் இந்த மேசியர் 87 என்ற பேராசை பிடித்த பாரிய விண்மீன்பேரடை ஒரு முழு சுருள்-விண்மீன்பேரடை  முழுசாக விழுங்கியிருக்கிறது!

ஆர்வக்குறிப்பு

மேசியர் 87 என்ற விண்மீன்பேரடையில் ஒரு விண்மீன்கோள் படலமொன்றை அவதானிப்பது என்பது, வெள்ளிக் கோளில் ஒளிரும் ஒரு 60 வாட் (60 Watt) குமிழ்மின்விளக்கை பூமியில் இருந்து தேடிக்கண்டறிவதற்குச் சமமாகும்!

This Space Scoop is based on a Press Release from ESO .
ESO

Sri Saravana, UNAWE Sri lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்