VLT யின் ஒவ்வொரு தொலைநோக்கியும் வெறும் கண்களால் பார்க்க முடியாதளவிற்கு அதாவது நான்கு பில்லியன் மடங்கு பிரகாசம் குறைந்த பொருட்களை அவதானிக்கும் அளவிற்கு திறன் கொண்டது.
ஆயிரக்கணக்கில் பிறவிண்மீன் கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம், இருப்பினும் இவற்றின் தோற்றம் பற்றி நாமறிந்தது சொற்பமே. நமக்கு தெரிந்தது ஒரு விண்மீனைச் சுற்றி தகடு போன்ற தூசால் உருவான பகுதிகளில் இருந்தே விண்மீன்கள் பிறக்கின்றன. குளிர்ச்சியடையும் வாயுவும் தூசுகளும் ஒன்றுசேர்வதால் இந்த நிகழ்வு நடக்கிறது. இப்படி விண்மீன்களை சுற்றியிருக்கும் பகுதியை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம் பிறவிண்மீன் கோள்கள் எப்படி பிறக்கின்றன என்று மேலும் விரிவாக தெரிந்துகொள்ள முடியுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு குழந்தைக் கோள் ஒன்று உருவாவதை இதுவரை நேரடியாக எந்தவொரு விண்ணியலாளரும் அவதானித்ததில்லை!
திருப்புமுனை
AB Aurigae என அழைக்கப்படும் இளம் விண்மீனைச் சுற்றி அடர்த்தியான தூசுத் தகடு காணப்படுகிறது. இப்படியான தகடுகள் இதற்கு முன்னரும் பல விண்மீன்களை சுற்றி அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஐரோப்பிய தெற்கு அவதானிபகத்தில் இருக்கும் பெரிய தொலைநோக்கியை கொண்டு ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் இந்த வினமீனைச் சுற்றியுள்ள தூசுத் தகட்டில் ஒரு புதிரான அம்சம் ஒன்றை கண்டுள்ளனர். அதாவது, இந்த தகட்டின் ஓர் பகுதியில் சுருளான கட்டமைப்பு ஒன்று காணப்படுகிறது. இங்குதான் புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் கோள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தச் சுருளான அமைப்பு புதிதாக பிறக்கும் கோள் ஒன்றிற்கான நேரடியான முதல் ஆதாரமாகும். இதற்கு முன்னர் வின்னியலாலர்காளால் மிகத் துல்லியமான இப்படியான ஒரு முடிச்சை படமெடுக்கமுடியவில்லை.
மேலே உள்ள படத்தில் இந்த பிரதேசம் AB Aurigae வைச் சுற்றி சுருளான வாயு மற்றும் தூசாக காணப்படுகிறது. AB Aurigae பூமியில் இருந்து 520 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. படத்தின் மையத்தில் இருக்கும் கருப்பு பிரதேசமே இந்த விண்மீன் இருக்கும் இடம். இது இருளாக இருக்க காரணம் என்னவென்றால், இந்த விண்மீன் வேண்டுமென்றே தொலைநோக்கியால் மறைக்கப்பட்டுள்ளது. அதான் அதன் பிரகாசம் அதனைச் சுற்றியிருக்கும் தகட்டை ஆய்வு செய்வதற்கு இடையூறாக இருக்ககூடாது என்பதற்காகத்தான். மிகப்பிரகாசமான மஞ்சள் நிறப் பிரதேசமே புதிதாக கோள் உருவாகிக்கொண்டிருக்கும் பிரதேசம். இந்தப் புதிய குழந்தைக் கோள் அண்ணளவாக சூரியனில் இருந்து நெப்டியூன் எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ அதே அளவு தொலைவில் அதன் விண்மீனில் இருந்து இருக்கிறது.
முடிச்சு உருவாகியது எப்படி?
சுழலான கட்டமைப்புகளை வேறு பல விண்மீன்களைச் சுற்றியுள்ள தூசுத் தகடுகளில் நாம் அவதானித்துள்ளோம். இப்படியான சுழற்சியான முடிச்சுகள் அங்கே புதிதாக கோள்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன என்று எமக்கு தெரிவிக்கின்றன. உருவாகும் கோளின் ஈர்ப்புவிசை அதனைச் சுற்றியிருக்கும் தூசை "உதைப்பதால்" இப்படியான சுழற்சியான அலைகள் அதைச் சுற்றி உருவாகின்றன. நீரில் பயணிக்கும் படகு எப்படி நீரலைகளை உருவாக்குமோ அப்படித்தான் இதுவும்.
மிகப்பெரும் தொலைநோக்கி (VLT)
ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் "மிகப்பெரும் தொலைநோக்கி (VLT)" மூலமே இந்த முடிச்சு அவதானிக்கப்பட்டுள்ளது. சில்லி நாட்டின் வடக்கு பிரதேசத்தில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் இந்த தொலைநோக்கி இருக்கிறது. இங்கே இருக்கும் வானத்தின் தெளிவின் காரணமாக பிரபஞ்சத்தின் பல பகுதிகளை தெளிவாக அவதானிக்கமுடியும். VLT என்பது நான்கு தனிப்பட்ட தொலைநோக்கிகள். அவை தனித்தனியாகவும் இயங்கும், ஒருமித்தும் இயங்கும். இதன் ஒவ்வொரு தொலைநோக்கியும் 8.2 மீட்டார் விட்டமுள்ள ஆடியைக் கொண்டுள்ளது. இது அண்ணளவாக வளர்ந்த ஒட்டகச்சிவிங்கியின் அளவாகும்.
VLT யின் ஒவ்வொரு தொலைநோக்கியும் வெறும் கண்களால் பார்க்க முடியாதளவிற்கு அதாவது நான்கு பில்லியன் மடங்கு பிரகாசம் குறைந்த பொருட்களை அவதானிக்கும் அளவிற்கு திறன் கொண்டது.
M Srisaravana, UNAWE Sri Lanka