ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்
15 செப்டம்பர், 2017

ஓநாய் மனிதர்கள், இரத்தக்காட்டேரிகள் மற்றும் இரவில் உலாவரும் மிருகங்களுக்கு ஒரு நற்செய்தி – காரிருள் கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது!

இந்தப் புதிய உலகம் ஒரு பிறவிண்மீன் கோளாகும், அதாவது சூரியனுக்கு அப்பாற்பட்டு வேறு ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள் இது. இதுவரை நாம் 3,500 இற்கும் அதிகமான புறவிண்மீன் கோள்களைக் கண்டறிந்துள்ளோம், அவற்றில் சில மிகவும் விசித்திரமானவை.

அவற்றில் சில உலகங்கள் அவற்றின் தாய் விண்மீனின் ஈர்ப்புவிசையால் பிளவு படுகின்றன, மேலும் சில உலகங்களில் மணிக்கு ஆயிரத்திற்க்கும் அதிகமான கிமீ வேகத்தில் புயல் காற்று வீசுகின்றது. இதில் ஒரு கோளின் மேற்பரப்பு எரியும் பனியால் அமைந்துள்ளது!

உண்மை என்னவென்றால், எமது பூமி போன்ற கோள்களே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அரியவகை கோள்களாகும்.

ஆகவே நாம் ஏன் இந்த பயமுறுத்தும் கருமை நிறக் கோளைப் பார்த்து வியப்படைகிறோம்? காரணம் என்னவென்றால் இதன் நிறத்தை எம்மால் கண்டரியக்கூடியவாறு இருந்ததே!

பிறவிண்மீன் கோள்கள் மிகத் தொலைவில் இருப்பதாலும், விண்மீன்களோடு ஒப்பிடும் போது மிகச் சிறியவை என்பதாலும் இவற்றைப் பார்ப்பது கடினம். பார்ப்பதே கடினம் என்கிற போது, அதன் பண்புகளை கண்டறிவது என்பது முடியாத காரியம் என்றே கருதலாம்.

அதிஷ்டவசமாக, விண்ணியலாளர்களுக்கு சில பல தந்திரங்கள் தெரியும்.

பிறவிண்மீன் கோள்கள் சொந்தமாக ஒளியை பிறப்பிப்பது இல்லை, இவை தங்களது தாய் விண்மீனில் இருந்து வரும் ஒளியை தெறிப்படையச் செய்கின்றன. ஒரு கோள் எவ்வளவு ஒளியை தெறிப்படையச் செய்கிறது என்பதைக் கணக்கிடுவதன் மூலம், கோள் ஒன்றின் பண்புகளை, அதன் நிறம் உள்ளடங்களாக எம்மால் கணிக்க முடியும்.

பனியால் உருவான மேற்பரப்புகள் அதிகளவான ஒளியை தெறிப்படையச் செய்யும். அதேவேளை புல்வெளி, தார் போன்றவை குறைந்தளவு ஒளியையே தெறிப்படையச்செய்யும்.

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள், புதிய தார்வீதியை விடக் கருமையானது. இதன் மேற்பரப்பில் விழும் ஒளியை பெருமளவு கபளீகரம் செய்கிறது. இன்னும் தெளிவாகக் கூறினால் இதன் மேற்பரப்பில் விழும் ஒளியில் வெறும் 10% மான ஒளியே மீண்டும் தெறிப்படைகிறது. எமது நிலவு இதனைவிட இரண்டு மடங்கு ஒளியை தெறிப்படையச்செய்கிறது.

மேலும் இந்தக் கோளின் நிறத்திற்கு முக்கிய காரணி இந்தக் கோளின் வெப்பநிலை. இந்தக் கோளில் வெப்பநிலை 2000 பாகைக்கும் அதிகமாகும். மிக அதிகமான வெப்பநிலை இந்தக் கோளின் வளிமண்டலத்தில் முகில்கள் உருவாவதை தடுக்கின்றது – முகில்கள் அதிகமாக ஒளியை தெறிப்படையச்செய்யும்.

ஆர்வக்குறிப்பு

நமது சூரியத் தொகுதியில் அதிகமாக ஒளியை தெறிப்படையச் செய்யும் உலகம் எதுவென்றால் – சனியின் துணைக்கோளான என்சிலாடஸ் (Enceladus) ஆகும். எமது நிலவு 14% மான சூரிய ஒளியை தெறிப்படையச் செய்கிறது. என்சிலாடஸ் அதன் மேற்பரப்பில் விழும் ஒளியில் 99% மான ஒளியை தெறிப்படையச் செய்கிறது.

This Space Scoop is based on a Press Release from Hubble Space Telescope .
Hubble Space Telescope

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்