சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு
25 ஏப்ரல், 2016

சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும்  பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.

இப்படியாகத் சிதறடிக்கப்படும் ஏற்றமடைந்த துணிக்கைகள் பூமியை வந்தடையும் போது, அவை பூமியின் துருவங்களுக்கு அண்மையில் உள்ள வளிமண்டலத்தில் அழகான அரோராக்களை உருவாக்குகின்றன. இவை துருவ ஒளி என்றும் அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த ஏற்றமுள்ள துணிக்கைகள், பூமியின் ரேடியோ தொடர்பாடல் மற்றும் மின்சார ஆலைகள் மற்றும் செய்மதிகளை பாதிப்படையச் செய்யக்கூடியது.

பொதுவாக சிறிய குள்ள விண்மீன்களில் உருவாகும் கிளரொளி நமது சூரியனைப் போன்ற பெரிய விண்மீனில் உருவாகும் கிளரொளியை விடச் சக்தி குறைவானதாக இருக்கலாம் என நீங்கள் கருதலாம், ஆனால் ALMA தொலைநோக்கி, மிக மிகச் சக்திவாந்த கிளரொளியை சூரியனை விட 10 மடங்கு திணிவு குறைந்த சிவப்புக் குள்ளன் வகை விண்மீனில் உருவாவதை கண்டறிந்துள்ளது.

இந்தச் சிவப்புக்  குள்ளனில் கிளரொளி உருவாகும் போது அதிலிருந்து வெளிவரும் ரேடியோக் கதிர்வீச்சு, நமது சூரியனில் இருந்து வெளிப்படும் ரேடியோக் கதிர்வீச்சை விட 10,000 மடங்கு சக்திவாந்த்தாக இருக்கின்றது.

ரேடியோக் கதிர்வீச்சு, மிக மிகவேகமாகப் பயணிக்கும் துணிக்கைகளால் உருவாகின்றது. ஆகவே இந்தச் சிறிய சிவப்புக் குள்ளன் அதிகளவு சக்திவாந்த ரேடியோக் கதிர்வீச்சை வெளியிடவேண்டும் என்றால், மிக மிகச் சக்திவாந்த கிளரொளி தொடர்ந்து அந்தச் சிவப்புக் குள்ளனில் இருந்து வெளிப்படவேண்டும்.!

பல சிவப்புக் குள்ளன் வகையைச் சேர்ந்த விண்மீன்களைச் சுற்றி கோள்கள் இருக்கின்றன. ஆனால் இந்தச் சிவப்புக் குள்ளனைச் சுற்றி எந்தவொரு கோள்களும் இருக்கக்கூடாது என்று நம்புவோம்! காரணம் அந்தக் கோள்களில் இருக்கும் உயிரினங்கள், அதிகளவான ஆபத்து மிகுந்த கதிர்வீச்சால் மிக வேகமாக அழிந்துவிடக்கூடும்!

ஆர்வக்குறிப்பு

சிவப்புக் குள்ளன்கள் சிவப்பாக இருக்கக் காரணம் அவை மற்றைய விண்மீன்களைப் போல அவ்வளவு வெப்பமானது இல்லை. வாயு அடுப்பில் இருந்துவரும் தீச்சுவாலையை சிந்தித்துப் பாருங்கள்: சுவாலையின் மேற்பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால் அது சிவப்பாகவும், எரிவாயு வரும் துவாரத்திற்கு அண்மைய பகுதி நீல நிறத்திலும் காணப்படும்.

This Space Scoop is based on a Press Release from ALMA .
ALMA

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்