சூரியத் தொகுதியின் குழந்தைப் பருவப் படம்
8 பிப்ரவரி, 2016

உங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த பிரமிக்கத்தக்க புகைப்படத்தில் அதிகளவான புதிதாகப் பிறந்த விண்மீன்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு பகுதியை உருப்பெருக்கி பார்த்தபோது, கோள்கள் உருவாகும் தட்டு (proto-planetary) ஒரு விண்மீனைச் சுற்றிக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூசு மற்றும் வாயுவாலான தகடுபோன்ற அமைப்பு வருங்காலத்தில் கோள்களாக உருமாறும்! இந்த விண்மீனும் அதனைச் சூழவுள்ள தகடுபோன்ற அமைப்பினாலும் இதனை “பறக்கும்தட்டு” என்று விண்ணியலாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நமது பூமியும் இப்படியான தூசு மற்றும் வாயுவாலான தகடு போன்ற அமைப்பில் இருந்தே உருவாகியது. எப்படியிருப்பினும், இப்படியான தகடு போன்ற அமைப்பில் இருந்து எப்படியாக முழுக்கோள்கள் உருவாகின என்று இன்றும் எமக்குச் சரிவரத்தெரியவில்லை என்றே கூறவேண்டும்.

ஆகவே இதனைக் கண்டறிய ஆய்வாளர்கள், கோள்கள் தோன்றும் தகடுகள் பற்றி பல்வேறுபட்ட தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்தப் படத்தில் இருக்கும் விண்மீனின் தகடுபோன்ற அமைப்பில் இருக்கும் தூசுகளின் வெப்பநிலையை ஆய்வாளர்கள் முதன்முறையாக அளவிட்டுள்ளனர்.

இதன் வெப்பநிலை மிகவும் குளிரான -266 பாகை செல்சியஸ் ஆகும். இதனை மிகவும் குளிர் என்று சொல்வதே அபத்தம்! ஏனென்றால் இதன் வெப்பநிலை முழுப்பூஜ்ஜிய (absolute zero) வெப்பநிலையை விட வெறும் 7 பாகையே அதிகம்! முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையே இந்தப் பிரபஞ்சத்தின் மிகக்குறைந்த வெப்பநிலையாகும் – அதனைவிடக் குறைந்த வெப்பநிலையில் எந்தப்பொருளும் இருக்காது!

கோள்கள் உருவாகும் தட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மூலக்கூறுகளால் இந்த தூசுகள் ஆக்கப்படவில்லை காரணம் அவை இந்தளவு குளிரான நிலைக்குச் செல்லாது. ஆகவே இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம், நாம் இதுவரை எப்படி தூசுத் தகட்டில் இருந்து கோள்கள் உருவாகும் என்று கருதினோமோ, அதனை மீளவும் சரிபார்க்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது. விண்வெளி நமக்கு வழிகாட்டும்!

ஆர்வக்குறிப்பு

பிரபஞ்சத்தில் மிகவும் குளிரான இடம் எங்குள்ளது? எமது பூமியில் தான்! பூமியில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடத்தில் பிரபஞ்சத்தின் மிகக்குறைவான வெப்பநிலை எட்டப்பட்டது. அது -273 பாகை செல்சியஸ். முழுப்பூஜ்ஜிய வெப்பநிலையை விட ஒரு பாகை அதிகம்! இது விண்வெளியைவிடக் குளிராகும்!

This Space Scoop is based on Press Releases from ALMA , ESO .
ALMA ESO

M Sri Saravana, UNAWE Sri Lanka

படங்கள்
அச்சிடக்கூடிய பதிப்பு

ஆர்வம் இருக்கிறதா? மேலும் அறிய...

Space Scoop என்றால் என்ன?

விண்ணியல் பற்றி அறிய

புதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்

Space Scoop நண்பர்கள்

எங்கள் தொடர்புகள்